''காசு இருக்கோ இல்லையோ, ஆனா கை நிறைய கடன் இருக்கு. அதை எப்படியாவது அடைக்கணும். என் மகனோட எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேர்க்கணும். என் ஓய்வுக்காலத்துக்குத் தேவையான தொகைக்கு இப்பயிருந்தாவது முதலீடு செய்தாகணும்'' என்று புதுச்சேரியிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 35 வயதான ராமச்சந்திரன். தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். மாதச் சம்பளம் பிடித்தம் போக 20,000 ரூபாய். மனைவி சுயதொழில் செய்வதன் மூலம் மாதம் 12,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ஆக, குடும்பத்தின் மொத்த வருமானம் 32,000 ரூபாய். இவர்களுக்கு எட்டு வயதான செல்ல மகன் அஜய். தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
தேவைகள்:

மகனை மருத்துவராக்க வேண்டும். இன்றைய நிலையில் எம்.பி.பி.எஸ். படிக்க 20 லட்சம் ரூபாய் தேவை.

மகனுக்கு 27 வயதில் திருமணம் செய்து வைக்க இன்றைய நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் தேவை.

ஓய்வுக்காலத்தில் யார் தயவையும் எதிர்பார்க்காமல் இன்றுபோல் அன்றும் வாழ முதலீடு செய்தல்.

இன்னும் பத்து வருடங்களுக்குள் சொந்த வீட்டை விரிவுபடுத்த பத்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும்.
தனது கடன் விவரம், சொத்து விவரம், குடும்பத்தின் வரவு செலவு கணக்குகள் என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தார் ராமச்சந்திரன். இவரின் விவரங்களை நன்கு அலசி ஆராய்ந்து நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் நிதி ஆலோசகர் ஆர்.ராஜசேகரன்.

இன்ஷூரன்ஸ்!
ஏற்கெனவே தன் பெயரில் எடுத்து வைத்திருக்கும் லைஃப் இன்ஷூரன்ஸ் (கவரேஜ் ஐந்து லட்சம்) பாலிசிக்காக மாதம் 1,500 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். இதுபோக 10 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 3,200 ரூபாய்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் (ஃபேமிலி ஃப்ளோட்டர்) பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 4,600 ரூபாய்.
இந்த இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தவிர, தனிநபர் விபத்துக் காப்பீடு (கவரேஜ்: 10 லட்சம் ரூபாய் - வருட பிரீமியம் 1,250 ரூபாய்), டிராஃபிக் ஆக்ஸிடென்ட் புரொட்டக்ஷன் (கவரேஜ்: ஒரு லட்சம் - வருட பீரிமியம் 135 ரூபாய்), ஹவுஸ் இன்ஷூரன்ஸ் (கவரேஜ்: 30 லட்சம் ரூபாய் - வருட பிரீமியம் 4,600 ரூபாய்) எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலீடு ஆரம்பிக்கும் முன்!

இன்றைய நிலையில் செலவுகள் போக எதிர்காலச் சேமிப்புக்கு என்று மீதம் இருக்கும் தொகை 6,710 ரூபாய். ஆனால், இவரின் அனைத்து எதிர்கால தேவைகளும் பூர்த்தியாக வேண்டும் என்றால் மாதம் 20,750 ரூபாய் தேவை. என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, சொத்தாக இருக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்று அதிலிருந்து கிடைக்கும் ஆறு லட்சம் ரூபாயிலிருந்து பெர்சனல் லோன், வாகனக் கடன், நகைக் கடனை அடைத்து விடலாம். ஆறு லட்சம் ரூபாய் கடன் தொகையிலிருந்து 4.94 லட்சம் ரூபாய் கழிந்தது போக மீதமிருக்கும் தொகை 1.06 லட்சம் ரூபாயை அவசரத் தேவைக்காக லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கவும்.
கடன்களை அடைப்பதன் மூலம் மாதத் தவணையாக கட்டிவந்த தொகை 11,440 ரூபாய் மிச்சமாகும். மகனின் கல்வித் தேவை பூர்த்தியாகும் வரையாவது குடும்பச் செலவுகளில் 3,500 ரூபாய் வரை மிச்சப்படுத்துவது உத்தமம். ஆக, செலவுகளை சிக்கனப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் தொகை 3,500 ரூபாய், இ.எம்.ஐ. கட்டிவந்த தொகை 11,440 ரூபாய், ஏற்கெனவே எதிர்காலத் தேவைகளுக்கு மீதமிருக்கும் தொகை 6,710 என மொத்தம் 21,650 ரூபாய் மீதமிருக்கும். இதை எதிர்காலத் தேவைக்கான முதலீட்டுக்கும், இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதேபோல, அடுத்த மாதம் முதல் விவசாய நிலத்திலிருந்து மூன்று லட்சம் ரூபாய் (ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்) வருமானம் வருமென ராமச்சந்திரன் சொல்லியிருந்தார். அந்த தொகையை எடுத்து உறவினர்களிடமிருந்து வாங்கியிருக்கும் வட்டியில்லா கடனில் (ஐந்து லட்சம் ரூபாய்) 60 சதவிகித தொகையைக் கட்டிவிடலாம்.
மகனின் கல்வி மற்றும் திருமணத்திற்கு!

மகனை டாக்டராக்க வேண்டும் என்கிறார் ராமச்சந்திரன். மகனின் பள்ளிக் கல்வி முடிய முழுமையாக இன்னும் பத்து ஆண்டுகள் பாக்கி இருக்கிறது. இன்றைய நிலையில் 20 லட்சம் ரூபாய் என்பது அன்றைய நிலையில் 42 லட்சமாக தேவைப்படும். அதற்கு இன்றிலிருந்து மாதம் 14,000 ரூபாயை சுமார் 13.50% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் பத்து ஆண்டுகள் முதலீடு செய்துவர வேண்டும். முதலீடு முதிர்வின்போது 35.19 லட்சம் ரூபாய் கிடைக்கும். மீதி தேவைப்படும் தொகைக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
மகனுக்கு 27 வயதில் திருமணம் செய்துவைக்க இன்றைய நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்று சொல்லியிருந்தார். திருமணத்திற்கு இன்னும் 19 ஆண்டுகள் பாக்கி இருக்கிறது என்பதால் அன்றைய நிலையில் 18 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 1,400 ரூபாயை சுமார் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவர வேண்டும். முதலீடு முதிர்வின்போது எதிர்பார்த்த தொகை கிடைத்துவிடும். அந்த தொகையை பயன்படுத்தி மகனின் திருமணத்தை சிறப்பாக முடிக்கலாம்.

வீட்டை விரிவாக்கம் செய்ய!
இன்னும் பத்து வருடங்களுக்குள் தற்போது இருக்கும் வீட்டின் மீது முதல் தளம் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்கு அன்றைய நிலையில் 10 லட்சம் தேவை. அதற்கு இன்றிலிருந்து மாதம் 4,350 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். இவர் எதிர்பார்த்திருக்கும் 10 லட்சம் தொகையைவிட இன்னும் அதிக தொகை தேவைப்படலாம். எதற்கும் கூடுதல் தொகையை முதலீட்டின் மூலம் ஈட்டி வைத்துக்கொள்வது நல்லதே.
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளில் விவசாய நிலத்தின் மூலம் வருமானம் வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் என்கிறபோது அதிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை எடுத்து உறவினர்களிடம் வாங்கிய வட்டியில்லா கடனின் பாக்கி இரண்டு லட்சம் ரூபாயை அடைத்துவிடுவது நல்லது. மீதமிருக்கும் ஒரு லட்சம் ரூபாயை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 10% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். முதிர்வின்போது 1.77 லட்ச ரூபாய் கிடைக்கும். இதன்பிறகு இன்னொரு மூன்று லட்சம் ரூபாய் விவசாய வருமானத்திலிருந்து கிடைத்திருக்கும். அந்த தொகையை அப்படியே 8% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு ஆண்டுகள் முதலீடு செய்யவேண்டும். அப்படி முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 3.50 லட்சம் ரூபாய். ஆக, பத்து ஆண்டுகளுக்குள் கிடைக்கும் இந்த தொகையையும் எடுத்து வீட்டு விரிவாக்கப் பணிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஓய்வுக்காலத்திற்கு!
ஓய்வுக்காலத்தில் இன்றுபோல் அன்றும் செலவு செய்து வாழ சுமார் 33 லட்சம் ரூபாய் தேவை. ஓய்வுபெற இன்னும் 25 ஆண்டுகள் இருப்பதால் இன்றிலிருந்து மாதம் 1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். மேலே சொன்ன மகனின் கல்வித் தேவைகள், திருமணத் தேவைகள் முடிந்ததும் அதற்காகச் செய்துவந்த முதலீட்டை நிறுத்திவிடாமல் ஓய்வுக்காலத்திற்காகத் தொடரலாம். அப்படி தொடர்ந்தால் ஓய்வுக்காலத்திற்கு இன்னும் அதிக தொகை கிடைக்கும். இதை பயன்படுத்தி ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழிக்கலாம். வாழ்த்துகள்!
- செ.கார்த்திகேயன்,
படங்கள்: எஸ்.தேவராஜ்.
No comments:
Post a Comment