Friday, September 28, 2012

விபத்து காப்பீடு: இன்னொரு ஹெல்மெட்!

விபத்து காப்பீடு: இன்னொரு ஹெல்மெட்!



'அவன் ரோட்டோரமாத்தான் நடந்து போயிருக்கான்..! பின்னாடி வந்த கார் மோதி, ஆள் காலி. இப்ப கஞ்சிக்கு வழியில்லாமல் குடும்பமே நடுத்தெருவுல நிக்குது’ - இது மாதிரி பலரும் சொல்லக் கேட்டிருப்போம். ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால் அவரது குடும்ப உறுப்பினர்கள் முதல் சுற்றத்தார்கள் வரை பலரும் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மனரீதியாக ஆறுதல் பெற முடியாவிட்டாலும் விபத்துக் காப்பீடு எடுத்து வைத்திருக்கும்பட்சத்தில் பொருளாதார சிக்கல்களில் நிச்சயம் மீண்டு வரமுடியும். வண்டி ஓட்டும்போது நாம் போட்டுக்கொள்ளும் ஹெல்மெட் நம் தலையைக் காக்கும் என்றால், இந்த விபத்துக் காப்பீடு பாலிசி நம்மை நம்பி இருக்கிறவர்களைக் காக்கும்.
விபத்துக் காப்பீடு!
விபத்துக் காப்பீடு என்பது ஒருவர் விபத்தினால் இறந்தாலோ அல்லது ஊனம் அடைந்தாலோ ஏற்படும் பணக் கஷ்டத்தை ஈடு செய்வதாக இருக்கிறது. 18 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் வரை இந்த விபத்துக் காப்பீட்டை எடுத்துக்கொள்ள முடியும். இந்த பாலிசியை பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுத்துக்கொள்ளலாம். சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குகின்றன.
தேவையானவை:
இந்த பாலிசி எடுக்க பின்வரும் விஷயங்கள் தேவை.
புகைப்படம்.
புகைப்பட அடையாளத்துக்கான ஆதாரம்.
வீட்டு முகவரி மற்றும் அலுவலக முகவரிக்கான ஆதாரம்.
விண்ணப்பப்படிவம்.
எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்?
வாகன விபத்தினால் ஏற்படும் இறப்பு.
சாலையில் நடந்து போகும்போது வாகனம் மோதி ஏற்படும் இறப்பு.
வீடு இடிபாடுகளில் சிக்கி மரணமடைவது.
விபத்துகளினால் ஏற்படும் ஊனம்.
தற்காலிக ஊனத்தினால் அலுவலகம் செல்ல முடியாமல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கும் இழப்பீடு கிடைக்கும்.
இழப்பீடு கிடைக்காத விஷயங்கள்..!
மது அருந்திவிட்டு வண்டி ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு கிடைக்காது (ஊனம் மற்றும் மரணம் எதுவாக இருந்தாலும்).
இயற்கையான மரணம்.
தற்கொலை அல்லது வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திக்கொள்ளுதல்.
கொலை.
குழந்தை பிறப்பின்போது ஏற்படும் மரணத்திற்கு.
கருவுற்றிருக்கும்போது உண்டாகும் மரணத்திற்கு.
எவ்வளவு இழப்பீடு?
விபத்தால் இறப்பு நேரிட்டால் 100% இழப்பீடாக கிடைக்கும்.
இரு கண்கள் அல்லது இரு கை அல்லது இரு கால்கள் இழக்க நேரிட்டால் 100% இழப்பீடு கிடைக்கும்.
இரு கண் பார்வை, இரு கை அல்லது கால்கள், ஒரு கண் மற்றும் ஒரு கால் அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை இழக்க நேரிட்டால் 100% இழப்பீடு கிடைக்கும்.
ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தால் 50% இழப்பீடு கிடைக்கும்.
முற்றிலும் நிரந்தர ஊனம் அடைந்தால் 100% இழப்பீடு கிடைக்கும்.
பிரீமியம் விவரம்:
25,000 ரூபாய் கவரேஜுக்கு 15 ரூபாய் வருட பிரீமியம்.
ஒரு லட்சம் ரூபாய் கவரேஜுக்கு வருடம் 60 ரூபாய் பிரீமியம். கவரேஜ் மற்றும் வருடம் அதிகமாக அதிகமாக பிரீமியம் குறையும் என்பது சாதகமான விஷயம். தன்னுடைய வருமானத்தின் அடிப்படையில் ஒருவருக்கு அதிகபட்சம் 60 மடங்கு பாலிசி கவரேஜ் கிடைக்கும். இது நிறுவனங்களுக்கு நிறுவனம் மாறுபடும்.
கிளைம் செய்யும்போது சமர்ப்பிக்க வேண்டியவை:
கிளைம் ஃபார்மை பூர்த்தி செய்து தரவேண்டும்.
விபத்து ஏற்பட்ட உடனே அவரின் குடும்பத்தார்கள் இன்ஷூரன்ஸ் அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
விபத்தில் ஊனமடைந்திருந்தால் ஊனத்தை ஊர்ஜிதப்படுத்தும் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
மரணம் ஏற்பட்டிருந்தால் மருத்துவமனையிலிருந்து பிரேத பரிசோதனை சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
அலுவலக நேரங்களிலோ அல்லது விடுப்பு நாட்களிலோ விபத்து ஏற்பட்டு அதற்கு கிளைம் செய்வதாக இருந்தால் அலுவலகத்திலிருந்து சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
இனி ஹெல்மெட்டுடன் இந்த பாலிசியையும் எடுத்து வைப்போம்!
- செ.கார்த்திகேயன்
''பொதுவாக விபத்துக் காப்பீடு பாலிசி என்றால் விபத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். ஆனால் டிராஃபிக் ஆக்ஸிடன்ட் பாலிசியில் விபத்துக் காப்பீடு மட்டுமல்லாமல் மெடிக்ளைமும் கிடைக்கும்'' என்கிறார் நிதி ஆலோசகரான எஸ்.ராஜசேகரன். இந்த பாலிசியை 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இதை எடுத்து வைத்திருக்கும்பட்சத்தில் விபத்துகளினால் உண்டாகும் மருத்துவமனை செலவுகளை (மருத்துவமனை அறை வாடகை, மருந்துச் செலவுகள், அறுவை சிகிச்சைக்கான செலவுகள், எக்ஸ்ரே செலவுகள் உள்ளிட்டவை) இந்த பாலிசியின் மூலம் கிளைம் செய்து கொள்ள முடியும். ஒரு லட்சம் ரூபாய் பாலிசிக்கு வருட பிரீமியம் 135 ரூபாய் மட்டுமே. இந்த பாலிசியை பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்ஷூரன்ஸ் வழங்கி வருகிறது. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

No comments:

Post a Comment